பிரதமர் நரேந்திர மோடி, தற்சார்ப்பு இந்தியா என்ற முழக்கத்தை அண்மையில் முன்வைத்தார். இந்த தற்சார்பு முழக்கம் நம்மை எதிர்கால பாதிப்பிலிருந்து காக்க நிகழ்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கச் சொல்கின்றன.
நாடு மட்டுமல்லாமல், நாட்டின் குடிமக்களும் எவ்வாறு தங்கள் நிதி நிலைமையில் தற்சார்பு நிலையை அடைய முடியும் என்பதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் தற்போது. கரோனா பொது முடக்கம், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தக்கம் ஆகியவற்றை நாம் எதிர்கொண்டு, தனிநபர் நிதியில் தற்சார்பை உறுதி செய்வது எப்படி என நான்கு எளிய வழிகள் மூலம் இந்த சிறப்புக் கட்டுரை விவரிக்கிறது.
அவசர கால நிதியை உறுதி செய்யுங்கள்
ஆபத்து காலத்தில் நமது தேவைக்கான நிதியை உறுதி செய்வது அவசியம். நமது வருவாய் தற்காலிகமாகத் தடைபடவோ, குறையவோ வாய்ப்புகள் பெரும்பாலும் அதிகம். சில சமயங்களில் வேலையிழப்புகள் ஏற்பட்டு வருமானம் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இது போன்ற அவசர சூழலை எதிர்கொள்ளும் கையில் பணம் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
- ஒரு வீட்டில் அடிப்படை செலவுகள், கடன் தவணைகள் உள்ளிட்ட செலவீனங்களை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
- நடுத்தர வர்கத்தினரின் மாத வருவாய் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கணக்கில் கொள்ளலாம்.
- இந்த வருவாய், செலவீனங்கள் தவிர மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமித்து, எதிர்கால அவசரத் தேவைக்கான நிதியாக நாம் அதை இலக்கில் கொள்ள வேண்டும்.
- இந்த அவசர கால நிதித்தொகை என்ற இலக்கை ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாயாக நாம் நிர்ணயம் செய்து கொள்வது அவசியம்.
- எனவே, மாதம் 3,000 ரூபாய் என குறைந்தபட்ச சேமிப்பை வீட்டினர் உறுதி செய்ய வேண்டும்.
- மேலும் இந்த இலக்குத் தொகையில் கூடுதலாக சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதையும் நாம் நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப, மருத்துவக் காப்பீடுகளின் அவசியம்
இன்றைய சூழலில் தனியார் மருத்துவமனைகளில் சேவைக் கட்டணம் பெருமளவில் வசூலிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் சேவைகளின் தரம் அனைவரும் அறிந்ததே. எனவே, நடுத்தரக் குடும்பத்தினர் தங்களின் ஆண்டு வருவாயில் ஒரு பங்கை மருத்துவக் காப்பீட்டுக்கு ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.
40 வயது நிரம்பியவர்கள் தங்களது எதிர்காலத் தேவைக்கு ஆண்டு தோறும் 20,000 ரூபாய் காப்பீட்டு தொகை செலுத்தினால், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு உறுதி செய்யப்படும். குறைந்த வருவாய் உள்ளவர்கள் 10 முதல் 15 லட்சத்திற்கான காப்பீட்டை மேற்கொள்ளலாம்.