திருப்பூரில் திரும்பும் திசை எங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டும் தொழிலாக இருந்து வருவதால், ஆடை தயாரிப்பு தொழில் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து கொண்டிருக்கிறது.
முழு ஊரடங்கில் அரசு கொடுத்த தளர்வுகளால் கடந்த மாதத்தில் 4 ஆயிரத்து 374 கோடிக்கு மட்டுமே திருப்பூரிலிருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில்துறையினர் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பின்னலாடை துறைக்கு என ஒரு சிறப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.