சியோல் : டெஸ்லா தானியங்கி மின்சார கார்களுக்கான சிப் தயாரிக்கும் அனுமதியை கொரிய நிறுவனமான சாம்சங் பெற்றுள்ளது.
தலைசிறந்த மின்சார வாகனங்களை தயாரித்து வரும் டெஸ்லா, தனது தானியங்கி கார்களில் பயன்படுத்தப்படும் HW 4.0 ரக சிப்களை தயாரிக்க சாம்சங்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கரோனா தொற்றின் விளைவாக, சிப்கள் தயாரிப்பு, விநியோக சங்கிலியில் பெரும் சுணக்கம் நேர்ந்தது. இதனைக் களைய கார் தயாரிப்பு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையில் டெஸ்லா கார்களுக்கான இரண்டாம் தலைமுறை சிப்களை தயாரிக்க சாம்சங் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
இதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமான 5 நானோ மீட்டர் சிப்கள் இல்லாமல், நிலைப்புத் தன்மை கொண்ட 7 நானோ மீட்டர் அளவு கொண்ட சிறிய ரக தானியங்கி கார்களுக்கான சிப்களை டெஸ்லாநிறுவனத்திற்கு சாம்சங் தயாரித்து கொடுக்கும்.
2019ஆம் ஆண்டு காலகட்டத்தில், டெஸ்லாவுக்கான முதல் தலைமுறை சிப்களை சாம்சங்நிறுவனம் உருவாக்கி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டெஸ்லா
இந்தியாவில் மின்சார கார் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சந்தை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இச்சூழலில், அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், தொழிலைத் தொடங்கி நடத்தும்படியும், சலுகைகள் குறித்து வரும் நாள்களில் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும், இதுவே டெஸ்லா இந்தியாவில் கால்பதிக்க பொன்னான நேரம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க டெஸ்லா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, முழுமையாக வடிவமைக்கப்பட்ட கார்களின் இறக்குமதிக்கு 60 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
எந்த நாட்டிலும் இல்லாத அளவு வரி
சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு டெஸ்லா எழுதியிருந்த கடிதத்தில், தற்போது இந்தியாவில் அமலில் உள்ள சொகுசு வாகனங்களுக்கான இறக்குமதி வரி, மின்சார வாகனங்களுக்கு செல்லுபடி ஆகாது என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
ஜூலை மாதத்தில், டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க், மின்சார வாகனங்களுக்கான தற்காலிக கட்டண நிவாரணத்தை எதிர்பார்ப்பதாக ட்வீட் செய்தார்.
டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த விரும்புவதாக மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இறக்குமதி வரிகள் உலகில் எந்த பெரிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது சிக்கலாக இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.