அகமதாபாத் (குஜராத்): இந்தியாவில் தனது முதல் கார் தயாரிப்பு ஆலையை குஜராத்தில் நிறுவ டெஸ்லா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கரோனா தொற்று காலக்கட்டத்தில் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் தங்களின் தொழிற்சாலையை கட்டமைக்க டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக, பெங்களூருவில் தங்களின் நிறுவன தலைமை அலுவலகத்தை அமைக்க அனுமதி பெற்றது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா.
தலைமையிடத்தை பெங்களூரில் அமைக்கும் டெஸ்லா
தொடர்ந்து இந்தியாவிற்கான 3 தலைமை இயக்குநர்களை நியமித்து டெஸ்லா அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி டெஸ்லாவின் உலகளாவிய மூத்த இயக்குநர் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன், தலைமை கணக்கியல் அலுவலர் வைபவ் தனேஜா, பெங்களூரைச் சேர்ந்த தொழில்முனைவோர் வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் ஆகியோர் இந்தியப் பிரிவின் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ், எனர்ஜி பிரைவேட் லிமிடெட் குழுவில் பணியமர்த்தியது.
வரிசையில் நின்ற மாநில முதலமைச்சர்கள்
டெஸ்லா, உலகம் முழுவதிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மின் சேமிப்பக (பேட்டரி) உற்பத்தியாளர்களும் சவால் விடும் வகையில் தங்களின் ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். இது மட்டுமில்லாமல் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட சூரிய மின் தகடுகள் தயாரிப்பு நிறுவனம் என்ற அங்கீகாரமும் டெஸ்லாவுக்கு உண்டு.