டிசிஎஸ் எனப்படும் புகழ்பெற்ற டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் முதல் தலைமைச் செயல் அலுவலர் ஃபாகிர் சந்த் கோஹ்லி. இந்தியாவின் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர். ஃபாகிர் சந்த் கோஹ்லி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96.
ஃபாகிர் சந்த் கோஹ்லி 1924ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி தற்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின்கீழ் லாகூரில் உள்ள ஆண்கள் அரசு கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி பட்டம் பெற்றார்.
அதன்பின் கனடா சென்ற அவர், குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் 1948ஆம் ஆண்டு பொறியியலில் பி.எஸ்சி (ஹான்ஸ்) பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து 1950ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.எஸ். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய கோஹ்லி, டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு படிப்படியாக உயர்ந்த அவர், 1970ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தார்.
1969ஆம் ஆண்டு செப்டம்பர் கோஹ்லி டிசிஎஸ்ஸின் பொது மேலாளரானார். 1994ஆம் ஆண்டில், டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் மிக முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனத்தை இந்தியாவுக்கு அழைத்துவந்து டாடா-ஐபிஎம் நிறுவனத்தை உருவாக்கினார்.
1999ஆம் ஆண்டு தனது 75 வயதில் கோஹ்லி ஓய்வுபெற்றார். அவர் ஒய்வு பெற்றாலும், அவர் வித்திட்ட தொழில்நுட்பப் புரட்சி மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறையாக உருபெற்றுள்ளது.
இதையும் படிங்க:ஸ்மார்ட்போன் சந்தைக்குப் புத்துயிர் அளித்த பண்டிகை மாதம்!