சென்னை: கரோனா காலத்தில் சிறப்பாக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட புதிய தொழில் முனையும் நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.
கரோனா தொற்று பாதிப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன. ஆனால், சில புதிய தொழில் முனையும் நிறுவனங்கள், இதனை வாய்ப்பாக பயன்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறி வருகின்றனர்.
அல்செர்வ் நிறுவனம்
அந்த வகையில், முதியவர்களுக்கான சேவைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘அல்செர்வ் நிறுவனம்’ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், வயதானவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்கள், வீட்டிலேயே மருத்துவ சேவைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது, முதியவர்களுக்குத் தேவையான உதவிகள் உள்ளடக்கிய சேவைகளை, மாதச் சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
ஊரடங்கு காலத்தில் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளியும் ‘அல்செர்வ் நிறுவனம்’ மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக முதியவர்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுபோன்ற தேவைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார் அதன் நிறுவனர் ஜகதீஸ்.
முதியவர்களுக்கான பாதுகாப்பு
தொடர்ந்து அவர் பேசும்போது, "பொதுவாகவே வயதானவர்களுக்கான வசதி என்றால், ஊருக்கு வெளியே புறநகர் பகுதிகளில் முதியவர்களுக்கான பிரத்யேக குடியிருப்புப் பகுதியிலேயே கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை ரியல் எஸ்டேட் வணிகத்தை மையப்படுத்தியே செய்யப்படுகிறது. இதனை மாற்றும் வகையில் நகரில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கும், வீட்டில் ஆட்கள் இருந்தாலும் கவனிக்க முடியாத சூழலில் உள்ள முதியவர்களுக்கும் பல்வேறு கட்டண சேவைகள் வழங்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை வெளியே கிடைத்தாலும் முதியவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, தனி கவனம், தொடர் பராமரிப்பு ஆகிய காரணங்களால் எங்களது சேவை முக்கியத்துவம் பெறுகிறது.
அல்செர்வ் நிறுவனர் ஜகதீஸ் இதற்காக பிரத்யேக செயலி, இணையதளம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபர்களுக்கும் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் உள்ளனர். ஐந்து கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் 15 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 70க்கும் மேற்பட்ட சேவை வழங்குபவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தற்போது 400-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சேவையைப் பயன்படுத்துகின்றனர்,. அடுத்து வரும் காலத்தில் பிற நகரங்களுக்கு இதனை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது” என்றார் ஜகதீஸ்.
தொழில்நுட்பங்கள் மூலம் அதிரடிக்காட்டும் கிரஹாஸ் விஆர்
அதேபோல, புதிய தொழில் முனைவோர் பட்டியலில் உள்ள நண்பர்களான ஸ்ரீராம், ஸ்ரீநிவாசன் ஆகிய இருவரும், தொழிற்சாலை பணியாளர்களுக்கு நவீன விர்ச்சுல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயற்சியளித்து வருகின்றனர் . தொழிற்சாலைகளில் புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கும், ஏற்கெனவே உள்ள தொழிலாளர்களுக்கும் புதிதாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கும் கைபேசியுடன் இணைக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக பயிற்சி அளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை இருவரும் இணைந்து கண்டறிந்துள்ளனர். 2018 தொடங்கப்பட்ட இந்நிறுவனம், அண்மையில் தொழில்நுட்ப கருவிகளை வடிவமைப்பதில் வெற்றி கண்டுள்ளது. தற்போது 60க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில்துறையினரிடம் இதனை வழங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிரஹாஸ் விஆர் செய்முறை விளக்கம் இது தொடர்பாக பேசிய ‘கிரஹாஸ் விஆர்’ நிறுவனர் ஸ்ரீநிவாசன், "பெரும் தொழிற்சாலைகளில் மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக பயிற்சி அளிக்கும் போது நேரம், பணம் ஆகியவை சேமிக்கப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறையில் வகுப்புகளிலேயோ பவர்பாயிட் மூலமாகவோ பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் இயந்திரங்களிடம் நேரடியாக சென்று கற்றுத்தரப்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஆனால் பணியாளர்கள் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் தாங்களே பணியாற்றியைதப் போல அனுபவம் பெறுகின்றனர். இதன் விளைவாக விபத்துக்களும் குறையும்.
மேம்பாட்டு நிதி
மூன்று ஆண்டுகள் தேவைப்படும் பயிற்சியை 6 மாதங்களில் வழங்கிவிட முடியும். இதில், தொழில்துறையினர் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பயனாளர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே பயிற்சி பெறமுடியும் என்பது கூடுதல் சிறம்பம்சம். கரோனா காலத்தில் இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். முதலில் கையில் இருந்த பணத்தை வைத்து தொழில் தொடங்கிய எங்களுக்கு, தற்போது வேல்டெக் தொழில்நுட்ப வணிக ஊக்குவிப்பு மையத்தால் 9.5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல கூடுதல் நிதியை திரட்டும் பணியிலும் ஈடுபட்டுவருகிறோம்" என்று கூறினார்.