டெல்லி: லேசான-மிதமான சுவாச பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் ஒரு சிறிய ரக வென்டிலேட்டரை திங்கள்கிழமை (ஆக.31) அறிமுகப்படுத்தியது.
இதனை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெக்னிக் இன் பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 'ஸ்பைஸ் ஆக்ஸி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தச் சாதனம் குறைந்த எடை கொண்டதாக இருப்பதால், அதை வீட்டிலும், ஆம்புலன்சிலும், இராணுவ அடிப்படை முகாம்கள், மருத்துவமனைகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளிலும், சக்கர நாற்காலிகளிலும் பயன்படுத்தலாம்.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் தனது அறிக்கையில், “இந்தச் சாதனம் லேசான மற்றும் மிதமான சுவாச சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ள தீர்வாகும். ஆதலால் கரோனா வைரஸ் அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கும் குறிப்பிடத்தக்க உதவியாக இருக்கும்.
மேலும், நாங்கள் ஆக்சிமீட்டர் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இது ஒரு எளிமையான சாதனம், இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மக்கள் எளிதாக அளவிட உதவுகிறது. இரண்டு சாதனங்களையும் விமான நிறுவனத்தின் ஈ-காமர்ஸ் வலைத்தளத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.