எங்களது அனுபவத்தில், கடன் வாங்குபவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு கடன் காப்பீடு என்றால் என்ன, அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது. இந்தக் கட்டுரையில், எங்களது அனுபவத்தின் மூலம் கடன் காப்பீட்டைப் பற்றிய வாடிக்கையாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்க முயற்சித்துள்ளேன்.
கடன் காப்பீடு என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
வீட்டுக் கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன். அக்கடன் வாங்கியவர் திரும்ப செலுத்தத் தவறினால், சொத்தை எடுத்துக் கொள்வதற்கு வங்கிக்கு உரிமை உண்டு. கடனைக் கட்ட முடியாமல் போனதற்கான காரணம் ஒரு பொருட்டல்ல. ஆகவே, குடும்பத்தின் முதன்மையாக சம்பாதிப்பவர் காலமாகி எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்கிக்கு சொத்தை கையகப்படுத்தவும், நிலுவையில் உள்ள கடன் தொகையை மீட்க அதை விற்கவும் முழு உரிமை உண்டு. இதுபோன்ற சூழ்நிலை ஒரு இயற்கைப் பேரழிவால் அல்லது இயற்கையின் செயலால் நடந்தாலும் கூட, குடும்பத்திற்கு எந்தவொரு சட்டபூர்வமான உதவியும் கிடைக்காது.
இருப்பினும், வீட்டுக் கடன் எடுக்கும் நேரத்தில், கடன் வாங்குபவர் கடன் காப்பீடு எடுப்பதைத் தேர்வு செய்யலாம். (முதன்மையாக சம்பாதிப்பவரின் பேரில்) கடன் காப்பீடு செய்யப்பட்டால், நிலுவையில் உள்ள கடன் தொகையை நேரடியாக வங்கியில் செலுத்துவதற்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்கும். இதனால் குடும்பத்திற்கு எந்தவிதமான நிதிச் சுமையும் கஷ்டங்களும் இல்லை என்பதை உறுதி செய்வதோடு மேலும் அவர்கள் தங்கள் கனவு வீட்டையும் தக்க வைத்திருக்க முடியும்.
கடன் காப்பீடு வாங்குவது கட்டாயமா?
கடன் காப்பீட்டை வாங்குவது கட்டாயமில்லை. கடன் வாங்கும் நேரத்தில், வாங்குபவர் கடன் காப்பீடு வாங்குவதைத் தேர்வு செய்யலாம்.
கடன் காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது? நான் அதை எங்கிருந்து வாங்க முடியும்?
பெரும்பாலான கடன் வழங்குநர்கள் சில காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறார்கள். உங்கள் கடன் ஆலோசகர் அல்லது வங்கிக்கு உங்கள் தேவையை நீங்கள் தெரிவித்தால், அவர்கள் உங்களுக்கான கடன் காப்பீட்டை ஏற்பாடு செய்ய முடியும். காப்பீட்டிற்கான வருமான உறுதி சான்று ஒரு பிரச்சினையாக இருக்காது, ஏனென்றால் நீங்கள் கடனுக்கு தகுதியுடையவர் என்பதால் நீங்கள் காப்பீட்டுத் திட்டத்திற்கும் தகுதியுடையவர் என்பது அனுமானம்.
காப்பீட்டு நிறுவனம் உங்கள் வயது, கடன் தொகை, கடன் காலம் மற்றும் வருமான விவரங்கள் போன்ற விவரங்களை வங்கியில் இருந்து பெற்றுக் கொண்டு, செலுத்த வேண்டிய பிரீமியத்திற்கான விவரங்களை உங்களுக்கு வழங்கும். பெரும்பாலான வங்கிகள் ஒற்றை பிரீமியம் கடன் காப்பீட்டை வழங்குகின்றன, அதாவது முழு கடன்காலத்திற்கான முழு பிரீமியமும் முன்பணமாக செலுத்தப்படும். எனவே, நீங்கள் 20 வருடங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 20 ஆண்டுகளுக்கான முழு பிரீமியமும் காப்பீட்டு நிறுவனத்திற்கு முன்பணமாக செலுத்தப்படும்.
ஒற்றை பிரீமியம் காப்பீடுகள் என்பது பெரிய முன்பண கட்டணத்தை உள்ளடக்கியது. என்னிடம் அந்தளவு பணப்புழக்கம் இல்லையென்றால் என்ன செய்வது?
வங்கிகளுக்கு வழக்கமாக காப்பீட்டு பிரீமியத்திற்கும் நிதியளிக்கும் வசதி உள்ளது. நீங்கள் 20 வருடங்களுக்கு 50 லட்சம் கடனை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றும் கடனுக்கான காப்பீடு செய்யும் பிரீமியம் தொகை இரண்டு லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில், உங்கள் கடன் காப்பீட்டின் பிரீமியத்தையும் சேர்த்து, அதாவது உங்கள் வீட்டை வாங்குவதற்கு 50 லட்சம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு லட்சம், மொத்தம் 52 லட்சம் ரூபாய் கடனை வங்கி வழங்கும். நீங்கள் இப்போது 50 லட்சத்திற்கு பதிலாக 52 லட்சத்திற்கு மாதாந்திரத் தவணை கட்ட வேண்டும். இந்த வழியில், காப்பீட்டுத் தொகையான இரண்டு லட்சத்தை முன்பணமாக செலுத்துவதற்கு பதிலாக, நீங்கள் இப்போது மாதந்திரத் தவணையை அதிகரிப்பதன் மூலம் மாதாமாதம் கட்டுவீர்கள். நிச்சயமாக, இது கூடுதல் வட்டி செலவைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வட்டி செலவு தவிர்க்க இயலாதது.
எனது வீட்டுக் கடன் வாங்கும் நேரத்தில் நான் கடன் காப்பீடு எடுக்கவில்லை. இப்போது நான் அதை எவ்வாறு பெறுவது?
கடனைத் தொடங்கும் நேரத்தில் கடன் காப்பீடு வழக்கமாக எடுக்கப்படுகிறது. அனைத்து கடன் வழங்குநர்களும் அதன் பின்னர் கடன் காப்பீட்டை எடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் வங்கியை அணுகி அவர்கள் உங்கள் கடனை காப்பீடு செய்ய அனுமதிக்கிறார்களா? அவ்வாறு செய்தால், பிரீமியம் தொகைக்கு நிதியளிப்பார்களா? என்று பார்க்கலாம். ஒரு வேளை, அவர்கள் அத்தகைய ஏற்பாடு செய்யாவிட்டால், உங்கள் கடனை வேறு ஏதேனும் வங்கிக்கு மாற்றிக் கொண்டு கடன் பரிமாற்றத்தின்போது புதிய கடன் வழங்குநரிடம் கடன் காப்பீட்டைத் தேர்வு செய்யலாம்.
கடன் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு வகையான காப்பீடுகள் என்னென்ன?