அப்பாடா என்று இன்று பெருமூச்சுவிட்டனர், பங்குச்சந்தை ஆர்வலர்கள். தொடர்ந்து, உலகப்பங்குச்சந்தைகள் சரிவையே சந்தித்து வந்த காரணமாக, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் பலத்த அடி விழுந்து கொண்டே இருந்தன. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் பதற்றம் முடிவிற்கு வந்துவிடும் என காத்து இருந்தவர்கள் பொறுமை இழந்து, வருவது வரட்டும் என களத்தில் குதித்தனர். அதற்குக் காரணம் வரிசையாக இறக்கை கட்டி வெளியான செய்திகள்.
அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவில் இருந்து, இனி கச்சா எண்ணெய் எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்போவதில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தும் அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து பெப்சி, கோ கோ, சோமோட்டோ போன்ற நிறுவனங்களும் தங்களுடைய விற்பனை அங்காடிகளை ரஷ்யாவில் மூடப்போவதாக அறிவித்தன.
புத்துயிர் ஊட்டிய புதிய செய்திகள்
இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோல், டீசல் எரிபொருட்களை ஐரோப்பாவிற்கு சப்ளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, இந்த மாதம் தொடங்கி சுமார் மூன்று வாரங்களுக்கு ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் செயலாக்க அலகு ஒன்றை மூடத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அது இப்போது செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை ப்ளூம்பெர்க் வெளியிட்டது.
நீண்ட கால முதலீட்டாளர்கள் நுழைவதற்கு சந்தைத் திருத்தம் ஒரு நல்ல வாய்ப்பு. ரஷ்யாவின் படையெடுப்பு கடந்த கால புவிசார் அரசியல் நெருக்கடிகளிலிருந்து வேறுபட்டது என ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி, எஸ்.நரேன் தெரிவித்த கருத்து ஆகிய செய்திகள் சந்தைக்கு புத்துயிர் ஊட்டின.