மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களை பற்றி அறிந்து கொள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில், 2019-20ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 3.3 விழுக்காடு, அதாவது 7 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என கணிக்கப்பட்டது.
நிதி பற்றாக்குறையை ஒழுங்குபடுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிதிநிலை மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மை (எஃப். ஆர். பி. எம்.) சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இதன் மூலம், வருவாய் பற்றாக்குறையை பூஜ்யமாகவும் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 3 விழுக்காடாகவும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
ஆனால், காலப்போக்கில் இச்சட்டம் நீர்த்துப்போய் பொருளாதாரத்தை மந்தமடையச் செய்ததாகவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பழைய எஃப். ஆர். பி. எம். சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் பொருளாதார ஆய்வறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் என். ஆர். பானுமதி கூறுகையில், "தத்துவத்தின் அடிப்படையில், செலவுகளை இச்சட்டம் குறைக்கவில்லை. மாறாக வருவாய் செலவிலிருந்து மூலதன செலவுக்கு மாற்றியுள்ளது. வருவாய் பற்றாக்குறையை பூஜ்யமாகவும் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 3 விழுக்காடாகவும் குறைக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால், காலப்போக்கில் மூலதன செலவு அதிகரித்து நுகர்வு செலவுகள் குறைந்தன.
மானியம், வரிப்பணம், அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ஓய்வூதியம் போன்றவை தான் வருவாய் செலவுகளாகும். சாலைகள் போடுவதற்கும் துறைமுகங்கள் அமைப்பதற்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவை கட்டுவதற்காகவும் செலவிடப்படுபவை மூலதன செலவுகளாகும்.
மூலதன செலவு உயர்வதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பட்டு நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.