இந்தியப் பங்குச் சந்தைகளின் வார நிறைவு நாளான இன்று, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்தது.
4.84 சதவீதம் அதிகரித்த ஒட்டுமொத்த வருவாய்
அதில், அந்நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம்வரை அதிகரித்து 11 ஆயிரத்து 262 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருவாய் 4.84 சதவீதம்வரை அதிகரித்துள்ளது. அதாவது ரூ.1.54 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.64 லட்சம் கோடியாக உள்ளது.
அசத்திய ரிலையன்ஸ் ஜியோ!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 45.40 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.990 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டால், வருவாய் 4.8 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 854 கோடி ரூபாயாக உள்ளது. வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய வருவாய் 15.5 சதவீதம் உயர்வைக் கண்டு 25 ஆயிரத்து 820 கோடி ரூபாயாகத் திகழ்கிறது.