இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ரெட்மி நிறுவனத்திற்குப் போட்டியாக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ரியல்மி. 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் ஒரு அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்நிலையில், ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மாதவ் ஷேத் கூறுகையில், "வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இந்தக் காலச்சூழலில் ஸ்மார்ட்போன்கள் முக்கியமானதாக மாறியுள்ளன. நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருள்களை பண்டிகை காலங்களில்தான் வாங்குவார்கள். வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு ஏற்ப சந்தையில் தற்போது பொருள்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதை குறிவைத்து நாங்கள் புதிய ஸ்மார்ட்போன்களையும் AIOT தயாரிப்புகளையும் விரைவில் வெளியிடவுள்ளோம்.
இந்தியாவில் நம்பர் 1 ஆன்லைன் பிராண்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வரும் பண்டிகை காலத்தில் சுமார் 20 முதல் 25 விழுக்காடு வரையிலான சந்தையை (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையையும் சேர்த்து) கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
இந்தாண்டு இறுதிக்குள் 80 லட்சம் AIOT தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த இலக்கை அடைய வரவிருக்கும் பண்டிகை காலம் எங்களுக்கு முக்கியமானது. ஏனென்றால், ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 50 விழுக்காடு விற்பனை இந்தப் பண்டிகை காலங்களில் மட்டுமே நடைபெறும்" என்றார்.