மும்பை நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட சி.கே.பி கூட்டுறவு வங்கி லிமிடெட் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன் நிதிநிலை பாதுகாப்பான நிலையில் இல்லாமல், வைப்பாளர்களுக்குப் பணம் செலுத்தும் நிலையில் இல்லாததால், அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கூறுகையில், 'வங்கி தனது ஒழுங்குமுறைக்கான குறைந்தபட்ச மூலதனத்தேவையான ஒன்பது விழுக்காட்டைப் பூர்த்தி செய்யவில்லை. இதனால், ஏப்ரல் 30ஆம் தேதி வணிக முடிவில் இருந்து அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உரிமத்தை ரத்து செய்ததன் விளைவாக, மும்பையின் சி.கே.பி கூட்டுறவு வங்கி லிமிடெட், 'வங்கி' வணிகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் வைப்புத்தொகையை திருப்பிச் செலுத்துதல் ஆகியவையும் அடங்கும். உரிமம் ரத்து செய்யப்பட்டு கலைப்பு நடவடிக்கை தொடங்குவதன் மூலம், கூட்டுறவு வங்கியின் வைப்புத் தொகையாளர்களுக்கு 1961ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின்படி, பணம் செலுத்தும் செயல்முறை இயக்கத்தில் அமைக்கப்படும்.
கலைப்பு நடவடிக்கையின்போது, ஒவ்வொரு வைப்புத் தொகையாளரும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி உச்ச வரம்பு ஐந்து லட்சம் வரை, தனது வைப்புகளை திரும்பப்பெற உரிமை உண்டு.
மேலும், வங்கியின் நிதி நிலைமை மிகவும் மோசமாகவும் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையிலும் உள்ளது. ஆகையால், மற்றொரு வங்கியுடன் இணைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. இதுதவிர, நிர்வாகத்தை மேலும் புதுப்பித்து நடத்துவதற்கான நம்பகத்தன்மை வாய்ந்த அர்ப்பணிப்பும் இல்லை.
வங்கி அதன் தற்போதைய மற்றும் எதிர்கால வைப்புத்தொகையை செலுத்தும் நிலையில் இல்லை. வங்கியின் விவகாரங்கள் வைப்புத்தொகையாளர்களின் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நடத்தப்படுகின்றன.
வங்கியின் மேலாண்மை, பொதுமக்களின் நலன் மற்றும் வைப்பாளர்களின் வட்டிக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளது' எனக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: 'கல்வி வணிகம் அல்ல, கட்டணத்தை தள்ளுபடி செய்க'- உச்ச நீதிமன்றத்தில் மனு!