ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பாரத ஸ்டேட் வங்கியின் நடத்திய பொருளாதார கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தைத் தொடர்ச்சியாகக் குறைத்துவருகிறது. கரோனாவுக்கு பின்னரும் வட்டிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பணப்புழக்கம் அதிகரிக்கும் என நம்பிக்கையுள்ளது.
நூறாண்டுக்கு ஒருமுறை வரும் இதுபோன்ற பெருந்தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கம் விநியோகச் சங்கிலியை முற்றிலுமாகப் பாதித்துள்ளது. நமது பொருளாதார நிலைத்தன்மை, வலிமையைச் சோதித்துள்ள இந்தப் பெருந்தொற்றை விரைவில் கடந்துவருவோம் என நம்புவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.