ஊரடங்கால் நாடு முழுதும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் முடங்கின. இவை மீண்டெழ, மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனுதவியை, வங்கிகள் மூலம் வழங்க, மத்திய நிதியமைச்சகம் நிர்ணயித்து அறிவித்தது.
அதன்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்குவதில் தீவிரம் காட்டிவருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக வங்கி அலுவலர்கள் கூறுகையில், "தங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே அனுமதித்து, கடனுதவியை வழங்குவது தொடர்பாக மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை வங்கி நிர்வாகத்தினர் அனுப்பிவருகின்றனர்.
கடந்த ஜூன் 3ஆம் தேதிவரை, 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவிக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.
வங்கிசாரா நிதி நிறுவனங்களும், கடனுதவி வழங்குவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான விவரங்கள், நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் உடனுக்குடன் 'அப்டேட்' செய்யப்பட உள்ளது.