பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பி.எம்.சி), மும்பை பாந்தர் (கிழக்கு) பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ரூ.4 ஆயிரத்து 375 கோடி ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜோய் தாமசை, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், ஹவுசிங் டெவலப்மெண்ட் இன்ப்ராடெக்ஸர் லிமிடெட் (ஹெச்.டி.ஐ.எல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் வாதவானையும் கைது செய்தனர். தொடர்ந்து அவரது மகன் சரங் வாதவானும் கைது செய்யப்பட்டார்.
இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் வருகிற 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் ஹெச்.சி.எல். தலைமையகம், ராகேஷ் வீடு மற்றும் பிஎம்சி வங்கியின் தற்போதைய தலைவர் வர்யம் சிங் மற்றும் முன்னாள் தலைவர் ஜோய் தாமஸ் என ஆறு முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அதுமட்டுமின்றி பி.எம்.சி. வங்கியுடன் தொடர்பில் உள்ள 18 நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.
அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நிறுவனமும் அடங்கும். ஹெச்டிஐஎல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறுவனத்தின் விளம்பர ஸ்பான்சராக உள்ளது. மும்பை பேஷன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது.