நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 விழுக்காடாக சரியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு தொழில் வல்லுனர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல. நாட்டின் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். நாட்டின் அடிப்படை பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. ஆகவே மீண்டு வருவதற்கான சக்தி நமது பொருளாதாரத்துக்கு உண்டு எனக் கூறினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரு நிறுவன முதலாளிகள் வங்கிக் கடன்கள் குறித்து யோசனை தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட நரேந்திர மோடி, இதுதொடர்பாக பின்னர் பார்க்கலாம் என பதில் அளித்துள்ளார்.