வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை ஏற்பாடு செய்த சர்வதேச மூலதன நிதியங்களுடனான நான்காவது வட்டமேசை மாநாட்டில் தலைமை ஏற்று அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "புதிய துறைகளில் முதலீடு செய்து ஊக்குவிக்குமாறும், இந்திய தொழில்முனைவோர் உருவாக்கிய அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்து மேம்பாட்டிற்கான நிபுணத்துவத்தை வழங்கி அதிக அளவில் முதலீடுகளை செய்யுமாறும் மூலதன நிதியங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து எண்ணற்ற நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
55 துறைகளில் பரவியுள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவதாகவும், இவற்றில் 45 சதவீதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து உருவாகியுள்ளதாகவும், 45% நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குனராவது இருப்பதாகவும் இந்திய ஸ்டார்ட்அப் சூழலியலின் பன்முகத்தன்மை, பரவல் மற்றும் உள்ளடக்கலுக்கு சான்றுகளாக இவை திகழ்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.