கோவிட்-19 பரவலைத் தடுக்க பல நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கு காலத்தில் பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், கரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதாரத்தைக் கட்டமைக்க ஊரடங்கு காலம், சர்வதேச மந்தநிலை, நுகர்வோர் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் முக்கியமானதாக இருக்கும் என்று டன் & பிராட் ஸ்ட்ரீட் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து டன் & பிராட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் அருண் சிங் கூறுகையில், "பல்வேறு நாடுகளும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் திட்டங்களை அறிவித்துவருகின்றன. இதன்மூலம் பொருளாதாரத்தை எவ்வளவு தூரம் மீட்டெடுக்க முடிகிறது, வருமான சமத்துவமின்மை எவ்வளவு தூரம் குறைகிறது, உற்பத்தித் திறன் எவ்வளவு தூரம் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நெருக்கடி நிலைக்குப் பின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தக் காரணிகள் உதவும்.
ஊரடங்கு காரணமாக அனைத்து அத்தியாவசியமற்ற செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. மக்கள் நடமாட்டம் பெருமளவு முடங்கியுள்ளதால் தொழில் துறை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.