டெல்லி: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் சனிக்கிழமை (நவ.21) காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்.
புதிய வகை கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயான கோவிட்-19 தாக்கம் காரணமாக உலக நாடுகள் பொருளாதாரம், சுகாதாரம் என பல்வேறு துறைகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சர்வதேச நாடுகள் தங்களின் எல்லைகளை அடைத்துள்ளன.
இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சில நாடுகளுக்கு இடையே பொருளாதார தடையும் தொடர்கிறது. இந்நிலையில், ஜி20 நிதியமைச்சர்கள் மாநாடு இன்று நடக்கிறது.
இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார். ஜி20 நாடுகள் அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சௌதி அரேபியா, தெற்கு ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
முன்னதாக மார்ச் மாதம் நடந்த ஜி20 மாநாட்டில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “நாம் கரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டு இருக்கிறேம். நமக்குள் ஒற்றுமை இல்லை, ஒற்றுமையாக போராடினால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும். ஒரு நாடு மற்றொரு நாடு மீது பொருளாதார தடை விதிப்பதை முதலில் கைவிடுங்கள். கரோனாவுக்கு எதிரான போரில் நாம் இன்னமும் வெற்றி பெறவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று எச்சரித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ”மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க பலரும் விருப்பம்”