வைர வியாபாரியான நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூபாய் 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்தது 2018 ஜனவரி மாதம் அம்பலமானது. இதனால் இந்தியாவை விட்டு தப்பியோடினார் நீரவ்.
இந்த கடன் மோசடி குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டும், ஏலத்தில் விற்கப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குத் தப்பியோடிய நிரவ் மோடி, சுதந்திரமாக வசித்துவருவதாக வந்த தகவலையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசுக்கு அமலாகத் துறை கோரிக்கை விடுத்திருந்தது.