மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் வெளியிட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள், அந்த துறை மற்றும் பாதுகாப்பு சார்பு தொழில்முனைவோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இது குறித்து டி.ஆர்.டி.ஓ அமைப்பின் இயக்குநர் சதீஷ் ரெட்டி ஈடிவி பாரத் செய்தியாளரிடம் அளித்த நேர்காணலின்போது பேசியதாவது, "மத்திய அரசு அறிவிப்பின்படி எதிர்காலத்தில் எந்தெந்த தயாரிப்பு உபகரணங்கள் தொடர்ந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்பதற்கான பட்டியல் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் அது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவுகணைகள், ரேடார் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு போர் போன்ற தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் திறனை இந்தியா கொண்டுள்ளது. இது படிப்படியாக மேம்பட்டு, வரும் ஆண்டுகளில் பிற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையில்லை என்ற நிலை உருவாகும்.
உள்நாட்டு உற்பத்தி அமைப்புகளை வளர்ப்பதற்கான சவாலுக்கு இந்திய தொழித்துறை தற்போது தயாராகியுள்ளது. இது இந்தியாவில் தொழில்கள் செழிக்க உதவும். இது இந்தியத் தொழில்துறை அடுக்குகளில் உள்ள சிக்கல்களை களைய உதவும்.
பிற நாடுகளிலிருந்து உதிரி பாகங்கள் வாங்குவதற்கு இந்தியா அதிகளவிலான தொகையை செலவிடுகிறது. புதிய சீர்திருத்தங்கள் மூலம், இதே பணத்தை கொண்டு உள்நாட்டு உற்பத்தியை வளர்ப்பதில் முதலீடு செய்யலாம். இது ஒரு வகையில் இந்தியத் தொழில்களுக்கு அந்நியச் செலாவணியை வழங்கும் மற்றும் நாட்டிற்கு நிறைய அந்நிய செலாவணியைக் கொண்டுவரும்.