நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கோவிட்-19 தொற்று காலத்தில் தனக்கு சம்பளம் வேண்டாம் என அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 2020-21 நிதியாண்டின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளம் தேவையில்லை என்றார் அம்பானி
அதில், நாட்டில் பரவிவரும் கோவிட்-19 பெருந்தொற்று சமூக, பொருளாதார, தொழில்துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, தனது ஓராண்டு சம்பளத்தை வேண்டாம் என அறிவித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளம் ரூ.15 கோடியாகும். நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 11 ஆண்டுகளாகத் தனது ஆண்டு சம்பளத்தை உயர்த்தாமல் ரூ.15 கோடி மட்டுமே பெற்றுவருகிறார் முகேஷ் அம்பானி.
அதேவேளை ரிலையன்ஸ் நிறுவன நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிக்கில் மேஸ்வானி ரூ.24 கோடி, ஹிதல் மேஸ்வானி ரூ.17.28 கோடி தொகையை முறையே ஆண்டு சம்பளமாகப் பெறுகின்றனர்.
இதையும் படிங்க:ரூ.14 லட்சம் கோடி சந்தை மதிப்பு; புதிய உச்சம் தொட்ட ரிலையன்ஸ் குழுமம்!