சென்னை:புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த காலகட்டத்தில், மனிதனால் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய பொருள்களில் தீப்பெட்டியும் ஒன்று என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம், தீக்குச்சிகள் கண்டுபிடிப்பதற்கு முன் கற்களை உரசி நெருப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இவற்றைக் கொண்டு தீ மூட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. அப்படி மூட்டப்பட்ட தீயும் எளிதில் அணைந்து போனது.
இவை அனைத்திற்கும் நிதானமாக நின்று எரியும் தன்மை இல்லாததால், மக்களுக்கு பெரிதாக பயன்படவில்லை. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ள ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது தான் நாம் இப்போது பயன்படுத்திவரும் பாதுகாப்பான தீப்பெட்டிகள்.
தீப்பெட்டி மூலப்பொருள்கள்
தீப்பெட்டியின் உரசும் பகுதி 25 விழுக்காடு நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள், 50 விழுக்காடு சிவப்பு பாஸ்பரஸ், 4 விழுக்காடு கார்பன் துகள், 5 விழுக்காடு பிற வேதிப்பொருட்கள், 16 விழுக்காடு ஒட்டும் பசை ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
மனிதர்கள் வாழ்வில் இன்றியமையாததாக மாறியிருக்கும் தீப்பெட்டியை உற்பத்திசெய்யும் தொழில்சாலைகளின் நிலை மிக மோசமானதாக மாறியிருந்தது. காரணம், மூலப் பொருள்களின் விலை எந்தளவு ஏறியிருந்தாலும், தீப்பெட்டியின் விலையை மட்டும் அவர்களால் உயர்த்தமுடியாத சூழல் இருந்தது.
விலை உயர்த்த முடிவு
தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் சிறிய அளவில் எண்ணற்ற தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்கப்பட்டு வந்தது. மூலப்பொருட்களான தீப்பெட்டி குச்சிகள், மருந்துகள், அட்டை போன்றவற்றின் விலை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது.
இதனையெல்லாம் கருத்திற்கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் தீப்பெட்டியை 2 ரூபாய்க்கு விலை ஏற்றம் செய்து விற்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் தீப்பெட்டியின் விற்பனை விலை 2 ரூபாயாக இருக்கும்.