நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (எம்.எஸ்.ஐ) மார்ச் மாதத்தில் மட்டும் தனது விற்பனையில் 47 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளது. இந்த மாதம் வெறும் 83,792 கார்களையே மருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் மாருதி 1,58,076 கார்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு விற்பனை 46.4 விழுக்காடு வரை குறைந்துள்ளது. ஆல்டோ மற்றும் வேகன்ஆர் அடங்கிய மினி கார்களின் விற்பனை 15,988 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 16,826 ஆக இருந்தது. அதாவது ஐந்து விழுக்காடு வரை மினி கார்கள் விற்பனை குறைந்துள்ளது.
அதேபோல் காம்பாக்ட் கார் பிரிவில், ஸ்விஃப்ட், செலெரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய மாடல்களின் விற்பனை 50.9 விழுக்காடு சரிந்துள்ளது. அதாவது கடந்தாண்டு 82,532 கார்கள் விற்பனை ஆன இந்த பிரிவில் இந்தாண்டு வெறும் 40,519 கார்களே விற்பனை ஆகி இருந்தன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதியும் 55 விழுக்காடு குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 10,463 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது இந்தாண்டு 4,712 ஆக குறைந்துள்ளது.