கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் வரும் மே 3ஆம் தேதிவரை லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் அமைப்புசாரா தொழில்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இந்தியாவின் 87 விழுக்காடு தொழில்துறை அமைப்புசாரா தொழிலாளர்களையே சார்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகளாக இருப்பதால் இந்த லாக் டவுன் காலத்தில் அவர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மேலும், இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் இந்த சூழலில் உணவு, தங்கும் வசதி இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல மாநில அரசுகள் உணவு, இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்தாலும் இந்த அசாதாரண சூழல் எப்போது மாறும் என்ற உத்தரவாதம் இல்லாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிடலாம் என்ற மனநிலையிலேயே உள்ளனர்.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா லாக் டவுன் உலகளவில் உள்ள தொழில்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுமார் 4 கோடி குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இந்த பாதிப்பின் காரணமாக கடும் சவால்களை சந்தித்துவருகின்றனர். அரசுகள் இந்த சவாலான காலத்தில் உறுதியான கொள்கை முடிவுகள் மூலம் பேரிடரை எதிர்கொள்வது அவசியம். இந்த பெருந்தொற்று உலகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் முக்கிய கேள்விகளை அரசாங்கங்கள் முன் எழுப்பியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜியோ தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிற இந்திய முதலீடுகள் என்னன்ன?