குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஏ.பி.ஜி. என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மீது ரூ.22,842 கோடி வங்கி மோசடி புகார் எழுந்துள்ளது.
அன்மை காலத்தில் எழுந்துள்ள மாபெரும் மோசடி புகார் இதுவாகும். சுமார் 28 வங்கிகளில் ரூ.22,000 கோடி அளவிற்கு கடன் பெற்று திரும்பி தராமல் மோசடி செய்ததாக, ஏஜிபி ஷிப்யார்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஸ்வினி குமார் ஆகியோர் மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே இந்த நிறுவனத்தின் கடன் வாராக்கடனாக மாறிவிட்டது. சொல்லப்போனால், வங்கிகள் இந்த மோசடியை இவ்வளவு விரைவாகக் கண்டறிந்ததற்கு அவர்களை பாராட்ட வேண்டும்.
பொதுவாக வங்கி மோசடிகளை கண்டறிய வங்கிகள் 55 மாதங்கள் எடுத்துக்கொள்வார்கள். இவ்விவகாரத்தில் நடவடிக்கை வேகமாகவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், வங்கிகளின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்திற்குப் பின் விலைவாசி உயர்வும் குறையத்தொடங்கியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:ஹிஜாப் அணியவில்லை என்றால் பாலியல் தொல்லை ஏற்படும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு