கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மருந்து தயாரிப்பு, விவசாய இடுபொருள் தயாரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியத் தொழில்களுக்கும், தொடர்ந்து இயங்கும் தொழில்களுக்கும் மட்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து மற்ற தொழில் நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து இயங்கும் நிறுவனங்கள்
எஃகுத் தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு தொழிற்சாலைகள், சிமெண்ட் உற்பத்தி ஆலைகள், ரசாயன ஆலயங்கள், பவுண்டரிகள், உரத் தொழிற்சாலைகள், ஆடைகளைத் தவிர்த்து மற்ற பின்னலாடை தொழிற்சாலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவை தொடர்ந்து இயங்கும் நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பெரு நிறுவனங்களும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இயங்கி வந்தாலும் தாங்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.
தொழிலாளர்கள் தட்டுப்பாடு
தேவையான தொழிலாளர்கள் இல்லாததுதான் மிகப் பெரிய பிரச்சினை என தொழில் துறையினர் கூறுகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அஞ்சி வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாக சொந்த ஊர் புறப்பட்டு சென்றதால், தங்களால் உரிய வகையில் தொழிற்சாலையை இயக்க முடியவில்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.
மூலப்பொருள்கள் விலை உயர்வு
மூலப்பொருட்களின் விலை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து உயர்ந்து வருவது, தங்களது தொழிலை மிகக் கடுமையாக பாதிப்பதாக சிறு, குறு, தொழில் துறையினர் கூறுகின்றனர். இவைதவிர, பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் சென்று வருவது சவாலாக உள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக பொது முடக்கத்திற்கு மத்தியில் தனது நிறுவனத்தை இயக்கிவரும் காக்களூர் தொழில் பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் பேசும்போது, "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக சென்னையில், அம்பத்தூர், திருமுடிவாக்கம், காக்கலூர், பெருங்குடி ஆகிய தொழிற்பேட்டைகளில் வடமாநில தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாக வீடு திரும்புகின்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
புதிய ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்தாலும் அவற்றை செயல்படுத்த முடியவில்லை. ஆட்டோமொபைல் உதிரிபாகம் உற்பத்தியில் வெல்டிங், ஃபோர்ஜிங் உள்ளிட்ட சில பணிகளுக்கு ஆக்சிஜன் கட்டாயமாக தேவைப்படுகிறது. ஆனால், தற்போது பெருந்தொற்று பாதிப்பு மோசமாக உள்ள நிலையில் அனைத்து ஆக்சிஜன்களும் மருத்துவப் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஒரு சில பணிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
பல்வேறு நிதி நெருக்கடிகளையும் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இதனை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும், குறிப்பாக ஜிஎஸ்டி வரியில் இருந்து தற்காலிக விலக்கு அளிப்பது, மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, கடனை திரும்ப செலுத்துவதற்கு இடைக்கால அவகாசம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
ஊரடங்கு காரணமாக பல்வேறு பொது அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்து சேர வேண்டிய பணம் கிடைக்கவில்லை என தொழில் துறையினர் கூறுகின்றனர். சிலருக்கு மாதக்கணக்கில் நிலுவைத் தொகை கிடைக்காமல் உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது, மின்சாரக் கட்டணம் செலுத்துவது, வரிகளைச் செலுத்துவது சிரமமாக உள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.
அனைத்து தொடர்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும் வெறும் 20 முதல் 30 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ளவர்கள் இயங்க முடியவில்லை.
சென்னை மற்றும் பொன்னேரியில் இயங்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஜயகுமார் நம்மிடம் பேசுகையில், "ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்ட பின்பு புதிய ஆர்டர்கள் வருவதில்லை. தாங்கள் உற்பத்தி செய்யும் மூலப்பொருள்களை பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், இறுதியாக சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்குவதற்கு நுகர்வோரும் இல்லாததால் தொழில்துறை தேக்கம் அடைந்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை மற்றுமொரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தில் உலோகங்களை மூன்று மணி நேரம் சூடாக்கி அதன் பின்பு பணியாற்றத் தொடங்குவோம். முன்பு வழக்கமாக 24 மணி நேரம் வேலை நடைபெறும் தற்போது 8 மணி நேரத்திலேயே பணியை நிறைவு செய்து விடுகிறோம். மறுநாள் மீண்டும் உலோகங்களை காய்ச்சுவதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் மின்கட்டணம் அதிகமாகிறது. எங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்
எங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய 12 வடமாநிலத் தொழிலாளர்கள் அண்மையில் சொந்த ஊர் புறப்பட்டு விட்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் 95 விழுக்காடு பேர் வடமாநிலத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தற்போது பணிக்கு வராததால் இங்குள்ள நிறுவனங்கள் சிரமப்படுகின்றன" என்றார்.
நிறுவனங்களிடம் பணப்புழக்கம் இல்லை, வந்து சேர வேண்டிய நிலுவைத் தொகையும் நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை என நிறுவனங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு அரசு ஒரு சில நிவாரண அறிவிப்புகளை தொழில்துறைக்கு வெளியிட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை என இவர்கள் கூறுகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நேரடியான நிதி உதவி வழங்க வேண்டும், குறைந்த வட்டியில் கடன் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர். மேலும், பெருந்தொற்றால் தொழில் பாதிப்படையாமல் இருக்க, தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இதையும் படிங்க:தடுப்பூசி திட்டத்தில் வங்கிப் பணியாளர்களுக்கு முன்னுரிமை: மத்திய நிதியமைச்சகம் கடிதம்