கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் பயணிகள் விமான சேவையை அனைத்து விமான நிறுவனங்களும் நிறுத்திக்கொண்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் இறுதி வாரம் முதல் உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை 1,700-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களை இயக்கியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா காலத்தில் கிர்கிஸ்தான், எகிப்து, உஸ்பெகிஸ்தான் உள்பட 21 இடங்களுக்கு இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 32 விழுக்காடு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.