இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவில் அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன. இதனால் விமான நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியில் உள்ளன.
நெருக்கடி நிலையைக் கருத்தில்கொண்டு கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வும் சம்பள குறைப்பும் செய்து வருகின்றனர். இருப்பினும், இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக முழு ஊதியம் வழங்கியது. இந்நிலையில், இண்கோவும் தனது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோனோ தத்தா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "எங்கள் ஊழியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊதியத்தை வழங்கியுள்ளோம். தற்போதுள்ள நிலைமையால் எங்கள் ஊழியர்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஊதிய குறைப்பை மேற்கொள்வதைத் தவிர வழியில்லை என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.