தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பின்னலாடை துறையில் சீனாவை வெல்ல என்ன செய்ய வேண்டும்?

சென்னை: அண்மைக்காலமாக பன்னாட்டு அரசியல் களத்தில் அச்சுறுத்தும் நாடாக சீனா பார்க்கப்படுவதால், பின்னலாடை துறையில் பன்னாட்டு சந்தையில் போட்டியிட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழில்துறையினர் யோசனை தெரிவிக்கின்றனர்.

industry
industry

By

Published : Sep 18, 2020, 6:13 PM IST

ஊரடங்கால் நாடு முழுவதும் சில்லறை ஜவுளி விற்பனை தேக்கமடைந்து பின்னலாடைத்துறையில் கடும் பணத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தொழிலாளர்களுக்கே ஊதியம் வழங்க முடியாத நிலையில் இருந்து தற்போதுதான் இத்துறை மெல்ல மீண்டு வருகிறது. உலக ஆடை வணிகச் சந்தையில் 50% அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்த சீனாவின், அரசியல் செயல்பாடுகள், கரோனா போன்ற காரணங்களால் உலக நாடுகள் பல, தங்களது உற்பத்தியை அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு மாற்றி வருகின்றன.

இந்திய பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையின் எதிர்காலம் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய, பிரிகாட் மெரிடியன் நிறுவன மேலாண் இயக்குநர் அஷ்வின் சந்திரன், " ஏப்ரல் மாதத்தில் முற்றிலும் முடங்கியிருந்த ஆயத்த ஆடை உற்பத்தி மே மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 70%க்கும் தமிழ்நாட்டில் 80%க்கும் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் ஆர்டர்கள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 15% வரை அதிகரித்துள்ளது.

இந்தியா பருத்தி ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும், பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை துணி வகைகள் தயாரிப்பு ஆகியவற்றில் பின்தங்கியே உள்ளது. சீனாவில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி நடைபெறுவதுபோல் இந்தியாவின் நிலை இல்லை. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே, உலக சந்தையில் விலையில் மட்டும் போட்டி போடாமல், தரமான உற்பத்தி, மதிப்புக்கூட்டு சேவை அதிகரிப்பிலும் நாம் போட்டியிட வேண்டும்.

வங்க தேசம் போன்ற நாடுகளின் 80% ஏற்றுமதி, பின்னலாடைத்துறையை சார்ந்திருப்பதால் அவர்களால் எளிமையாக தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திட முடிந்தது. நம்முடைய ஏற்றுமதிக்கு அமெரிக்கா, ஐரோப்பாவில் இறக்குமதி வரியை குறைக்க கோரினால், அவர்கள் இங்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியை குறைக்க வலியுறுத்துகிறார்கள். இதனால் உள்ளூர் தொழில்கள் கடுமையாக பாதிக்கும். தடையற்ற வர்த்தக உடன்படிக்கை இல்லாமல் இந்திய பின்னலாடை வளர்ச்சி பெற முடியாது. ஆனால் இதனை செய்வது எளிதானதல்ல " என்று கூறினார்.

தடையற்ற வர்த்தக உடன்படிக்கை இல்லாமல் இந்திய பின்னலாடை வளர்ச்சி பெற முடியாது

கரோனா பாதிப்பு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்திருப்பதால் வீட்டில் உடுத்தும் உடைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவைக்கு தேவை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அலுவலகங்களுக்கு அணிந்து செல்லும் வகையிலான சட்டை, பேன்ட், பெண்களின் உடைகள் ஆகியவை பெரிய அளவில் விற்பனையாகவில்லை. மேலும், தற்போது பெரும்பாலான வணிகம் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதாலும், இவற்றின் தேவை குறைவாக உள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சிவா டெக்ஸ்யார்ன் நிறுவன மேலாண் இயக்குநர் சுந்தரராமன் பேசுகையில், " கடைகள் திறக்கப்படுவதாலும், தீபாவளி போன்ற விழாக்காலம் நெருங்குவதாலும் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது போட்டித்திறன் குறைவு. செயற்கை ரக நூல்களின் விலை இந்தியாவில் அதிகமாக இருப்பதால், பருத்தி தவிர மற்ற ரக துணிகளின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

கரோனா பாதிப்புக்கு முன், இந்தியாவில் மருத்துவ பாதுகாப்பு உடை உற்பத்தி குறைவாக இருந்தது. தற்போது, முகக்கவசம் உள்ளிட்டவற்றுக்கு தேவை அதிகரித்து, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 10% பாதுகாப்பு உடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகத்தரம் வாய்ந்த முகக்கவசங்கள் செய்ய இந்தியாவில் 3-4 நிறுவனங்களே உள்ளன. இதற்கான மூலப் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருப்பதால், இங்கு உற்பத்தி குறைவாக உள்ளது.

30 ஆண்டுகளுக்கு தொலை நோக்கு பார்வையுடன் நாம் திட்டமிட வேண்டும்

சீனாவில் தற்போதுள்ள தொழில் வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக நடைபெற்றது. இதுபோன்ற வளர்ச்சியைப் பெறவும், அவர்களுடன் போட்டி போடவும் 30 ஆண்டுகளுக்கு தொலை நோக்கு பார்வையுடன் நாம் திட்டமிட வேண்டும் " என்று கூறினார்.

இதையும் படிங்க: கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மாயமான பேடிஎம் செயலி

ABOUT THE AUTHOR

...view details