இந்திய ரிசர்வ் வங்கி இந்திய பெருநிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள தங்களது இணை மற்றும் கிளை நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து சுமார் 2.69 பில்லியன் டாலர் அளவிற்கு வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த தொகையானது 18 சதவிகிதம் அதிகமாகும்.
இந்திய பெரு நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 18% அதிகரிப்பு - ஓஎன்ஜிசி
இந்தியாவைச் சேர்ந்த பெருநிறுவனங்கள் வெளிநாட்டில் செய்துள்ள முதலீட்டுத் தொகை 18 சதவிகதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக முதலீடு செய்யப்பட்டுள்ள 2.69 பில்லியன் டாலரில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனம் சுமார் 1.15 பில்லியன் டாலர் தொகையை சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜிந்தால் ஸ்டீல் நிறுவனம் 82 மில்லியன் டாலர் தொகையை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் முதலீடு செய்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் சுமார் 70.37 மில்லியன் டாலர் தொகையை மியான்மர், ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.