முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.
இந்நிலையில், இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் வீடியோ கான்பெரன்சிங் வழியே உரையாடினர்.
அப்போது பேசிய முகேஷ் அம்பானி, "நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடாக இருக்கும். இந்தியாவின் நடுத்தர வர்க்கம் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு விழுக்காடுகள் வரை வளரும்.
அடுத்த இருபது ஆண்டுகளில் உலகின் டாப் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக, நமது பொருளாதாரம் இளைஞர்கள் முன்னெடுக்கும் டிஜிட்டல் பொருளாதாரமாக இருக்கும்.
நாட்டில் தனிநபர் வருமானம் என்பது இப்போது 1,800-2,000 டாலராக உள்ளது. இது 20 ஆண்டுகளில் 5,000 அமெரிக்க டாலராக உயரும். அதாவது நாட்டிலுள்ள மக்களின் தனிநபர் வருமானம் 100 விழுக்காட்டிற்கும் மேல் உயரும்.
ஃபேஸ்புக் உள்ளிட்ட உலகின் பல நிறுவனங்களுக்கும் இந்தியாவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த ஒரு பொன்னான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் நாடு முழுவதும் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை விரைவுபடுத்தும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: நடப்பாண்டில் நாட்டின் நெல் கொள்முதல் 21% உயர்வு