உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் ஒருமாத காலமாக முற்றாக முடங்கியுள்ளது. குறிப்பாக லாக்டவுன் காரணமாக உலக நாடுகளின் பொருளாதார நடவடிக்கை தேக்கம் கண்டுள்ள நிலையில், இந்த சூழல் 1930ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலையை விட மோசமானதாக இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த சிக்கலுக்கெல்லாம் ஆதி காரணமாக சீனாதான் விளங்கியதாக உலக நாடுகள் ஆத்திரத்தில் உள்ளன. வைரஸ் பாதிப்பின் தொடக்கமாக சீனா விளங்கும் நிலையில் மற்ற நாடுகளை சீனா உஷார் செய்திருக்கவேண்டும். ஆனால், இந்த விவகாரத்தை சீனா மூடிமறைத்து பாதிப்பை குறைத்து காட்டி உலக நாடுகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
இதையடுத்து பல உலக நாடுகள் சீனாவுடனான தங்களின் முதலீடுகள், வர்த்தக உறவை முறித்துக்கொள்ள தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்க்கும் நேரமிது என மத்திய சிறு குறு தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 100 லட்சம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு வசதி மேற்கொள்ளும் திறன் இந்தியாவில் உள்ளது. இதை பயன்படுத்தி, சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் பணியில் இந்தியா களமிறங்க வேண்டும் என்றார்.
நிதியமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து துறைகளும் இதற்கான பணியில் தீவிரமாக இயங்கிவருவதாகத் தெரிவித்துள்ள கட்கரி, கரோனாவுக்கு எதிரான இந்த பொருளாதாரப் போரில் இந்தியா வெற்றிபெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஓய்வு வயது குறைக்கப்படாது - மத்திய அமைச்சர் உறுதி