உலகின் முன்னணி பர்னிச்சர் விற்பனை நிறுவனமாக ஐகியா (IKEA) திகழ்கிறது. ஸ்வீடனைச் சேர்ந்த இந்நிறுவனம் தரமான பர்னிசர்களை நடுத்தர மக்கள் வாங்கும்விதமாக விற்பனைசெய்து உலகளவில் வெற்றிகரமான பிராண்டாக உருவெடுத்துள்ளது.
ஐகியா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கிளையை 2018 ஆகஸ்ட் மாதம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்கியது. இங்கு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தனது இரண்டாவது கிளையை தற்போது மும்பையில் தொடங்கவுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் சுமார் ஐந்து லட்சம் சதுரடி பரப்பில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு இந்நிறுவனம் செயல்படவுள்ளது. வரும் 18ஆம் தேதி (டிசம்பர் 18) நவி மும்பை கிளை செயல்படத் தொடங்கும் என ஐகியா நிறுவனத்தின் இந்திய தலைமைச் செயல் அலுவலர் பீட்டர் பிட்செல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் சுமார் 30 நாடுகளில் 378 கிளைகளை ஐகியா நிறுவனம் கொண்டுள்ளது. கோவிட்-19 காலம் என்பதால் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டே இந்நிறுவனம் தொடங்கப்படவுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரிசர்வ் வங்கி கணிப்பைவிட ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்கும் - சரண் சிங்