தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதலால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, நிதி தரநிலைப்படுத்தும் அமைப்பான கிரிசில் (CRISIL) அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், பெருநிறுவன வருவாய் 15 சதவிகிதம் குறையக்கூடும் எனவும், நாட்டின் உள்நாட்டு மொத்தஉற்பத்தி (ஜி.டி.பி.) ஐந்து சதவிகிதத்திற்கும் குறையும் எனவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதன்மூலம் சிறு தொழில்கள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
பணியாளர்களுக்கு சம்பளம்கூட வழங்க சிரமப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ‘தற்சார்பு இந்தியா’ சிறப்புத் திட்டமும் உறுதியளிப்பும் வெளியிடப்பட்டு ஒரு மாதம் முடிந்துவிட்டது. சிறு தொழில்களுக்கான நிதி வழங்குவதில் பற்றாக்குறை இருக்கக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத் துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன், இது தொடர்பான விதிகளையும் தளர்த்துமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டார்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, இரண்டு நாள்களுக்கு முன் வங்கிகள் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. சிறு தொழில் பிரிவு பேரிடரில் இருப்பதாகவும், மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கிரிசில் சமீபத்தில்வெளியிட்ட பகுப்பாய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது.
இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்திய தொழில் துறை கூட்டமைப்பானது (சிஐஐ), நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைப்பதில் பத்து அம்ச செயல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலீட்டை மறுசீரமைத்து பணப்புழக்கத்தை அதிகரிப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. ரிசர்வ் வங்கியும் நிதித் துறையும் இந்தத் தேவையை நிறைவுசெய்ய தவறிவிட்டதாகவும், உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள் தேவை எனவும், கிரிசில் தனது ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சிறப்புத் திட்டமானது, இந்த நோய்த்தொற்று காலத்துக்கு முன்பே ஒன்றரை ஆண்டுகளாக கடும் அழுத்தத்தில் இருக்கும் சிறு தொழில்களை காப்பாற்றாது என்று, பிரபலமான மூடிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அளித்திருக்கும் ஊக்கமானது உள்நாட்டு மொத்த வளர்ச்சியை 10 சதவிகிதமாக்கும் என்று அரசு அறிவித்தாலும், ஃபிட்ச் தரநிலை நிறுவனம் வேறுவிதமான அறிக்கையை அளித்துள்ளது. இந்த ஊக்கத் திட்டம் நிச்சயமாக 10 சதவிகிதமாக அதிகரிக்காது என்றும், பொருளாதார மீட்டமைப்பிற்கான பற்றாக்குறையை இது நிவர்த்தி செய்யாது என்றும் தெரிவித்துள்ளது.