கரோனா பரவல் காரணமாக வீடுகள் விற்பனை வரலாறு காணாத சரிவு! - கரோனா காரணமாக சரியும் வீடுகள் விற்பனை
கரோனா பரவல் காரணமாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை சுமார் 80 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Housing sales plunge in top 8 cities
By
Published : Jul 28, 2020, 8:26 PM IST
கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மட்டும், இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீட்டு விற்பனை 79 விழுக்காடு குறைந்து 19,038 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
'Real Insight: Q2 2020' என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில், PropTiger என்ற நிறுவனம் கரோனாவால் இந்தியாவில் வீடுகள் விற்பனை எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டது.
அதில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் வீடுகள் விற்பனை என்பது சுமார் 52 விழுக்காடு வரை சரிந்து 88,593 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி-என்.சி.ஆர் (நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத்), எம்.எம்.ஆர் (மும்பை, நவி மும்பை, தானே), புனே உள்ளிட்ட நகரங்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதிகபட்சமாக ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை 86 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்தாண்டு, இந்த காலகட்டத்தில் 8,122 வீடுகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு வெறும் 1,099 வீடுகள் மட்டுமே விற்பனையானது.
வீடுகள் விற்பனை நிலவரம் (ஏப்ரல் முதல் ஜூன் வரை)
2019இல் விற்பனை ஆன வீடுகள்
2020இல் விற்பனை ஆன வீடுகள்
சரிவு
ஹைதராபாத்
8,122
1,099
86%
மும்பை
29,635
4,559
85%
அகமதாபாத்
6,784
1,181
83%
தேசிய தலைநகர் பகுதி
9,759
1,886
81%
கொல்கத்தா
5,268
1,317
75%
புனே
18,581
4,908
74%
பெங்களூரு
10,251
2,776
73%
சென்னை
4,364
1,312
70%
இது குறித்து ஹவுசிங்.காம் மற்றும் PropTiger நிறுவனத்தின் சிஓஓ மணி ரங்கராஜன் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தைப் போலவே இந்திய பொருளாதரமும் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். இத்துடன் வேலையின்மையும் இணைந்துகொண்டதால் இந்திய பொருளாதாரம் தற்போது நிச்சயமற்ற தன்மையில் உள்ளது" என்றார்.
2020ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தேவை உயரும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த மணி ரங்கராஜன், தேவை எந்தளவுக்கு உயரும் என்று உறுதியாக கூற மறுத்துவிட்டார்.
இது குறித்து ஹவுசிங்.காம் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் அங்கிதா சூட் கூறுகையில், "ஊரடங்கு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வீடுகள் விற்பனை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் காலங்களில் வீடுகளின் தேவை அதிகரிக்கவே செய்யும்" என்று தெரிவித்தார்.