இந்தியாவில் கோவிட்-19 லாக்டவுன் மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து துறைகளும் பெரும் முடகத்தைச் சந்தித்தன. இதன் உடனடி விளைவாக வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு உள்ளிட்டவை அதிகளவில் அரங்கேறின.
ஏப்ரல், மே, ஜூன் உள்ளிட்ட மாதங்களில் இதன் தாக்கம் மோசமாக இருந்த நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நௌக்கரி நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதன்படி, ஆகஸ்ட் மாத காலத்தை ஒப்பிடும்போது செப்டம்பரில் வேலைவாய்ப்பு தொடர்பான செயல்பாடுகள் 24 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதில் மருந்தகத் துறை 44 விழுக்காடு, எஃப்.எம்.சி.ஜி. 43 விழுக்காடு, கல்வி 41 விழுக்காடு, தகவல் தொழில்நுட்பம் 32 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளன.
மேலும். லாக்டவுன் தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் ரியல் எஸ்டேட், சுற்றுலா போன்ற துறைகள் இனிவரும் நாட்களில் உயர்வைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு செயல்பாடுகள் உயர்வை சந்தித்த நகரவாரியான பட்டியலில் 26 விழுக்காட்டுடன் புனே முதலிடத்திலும், 24 விழுக்காட்டுடன் சென்னை மற்றும் ஹைதரபாத் இரண்டாமிடத்திலும் உள்ளன. 14 விழுக்காட்டுடன் பெங்களூரு மூன்றாமிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 பண்டிகைகால முன்பணம்: நிதியமைச்சர் அறிவிப்பு