கரோனா பாதிப்பு காரணமாக அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் மீதான சார்பு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், சிறு தொழில்கள் மின்னணுமயமாவதற்கு மென்பொருள் சேவை வழங்கிவரும் கோ ஃப்ரூகல் (Go Frugal) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான குமார் வேம்பு உடன் ஈடிவி பாரத் நேர்காணல் கண்டது.
அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
"ஊரடங்கு தொடங்கப்பட்ட காலத்தில் அதிக நிறுவனங்கள், கடைகள் டிஜிட்டல் மயமாயின. தொடக்கத்தில் இது சற்று சிரமமாக இருந்ததால், புதிய மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை. பின்னர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறைக்கு மாறிவிட்டோம். சூப்பர் மார்கெட்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள் அதிகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு மாறி வருகின்றன.
கரோனா பாதிப்புக்கு பிறகு உணவு வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவது குறைந்துள்ளது. அதேபோல், முடித்திருத்தம் செய்யும் கடைகள், ஸ்பாக்கள், நகைக்கடை, அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணிக்கடைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், கடைகள் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. அதிகளவிலான சூப்பர் மார்கெட்களும், மளிகை கடைகளும் சரக்குகளின் இருப்பு குறித்த தகவலை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கி வருகின்றன. இதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நெறிப்படுத்துவதுடன் இணைய வணிகத்தில் நுழைய முடியும்.
இணைய வணிகத்திற்கு தயாராகும் மளிகை கடைகள்! தற்போது கரோனா அச்சம் காரணமாக மக்கள் இணையம் வாயிலாக பொருட்களை வாங்கவே விரும்புகின்றனர். இதனால் அண்மையில் சுமார் 2,500 நிறுவனங்கள் டிஜிட்டல் தளத்துக்கு மாறியுள்ளன. வாடிக்கையாளர்களின் வெவ்வேறான தேவைகளுக்கு ஏற்ப மென்பொருள் சேவை வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள், உணவகத்துக்கு நேரடியாக சென்று தங்களது செல்போனிலேயே உணவுகளின் பட்டியலை அறிந்து, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வகையில் செயலி ஒன்றை வடிவமைத்துள்ளோம். இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அதேபோல் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர்களை பெறுவதற்கான மென்பொருளையும் உருவாக்கியுள்ளோம்.
இன்றைய உலகில் ஒரு வணிகத்தை இணைய வழிக்கு எடுத்துச் சென்று, பல்முனையங்களில் வாடிக்கையாளர்கள் சேவையை வழங்குவது முக்கியமானது. உதாரணமாக இணைய விற்பனையை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், சிலருக்கு கடையில் நேரில் வந்து பொருட்களை தேர்வு செய்து அதனை டோர் டெலிவரி செய்ய விரும்பினால், அதற்கான தீர்வுகளும் வழங்க வேண்டும். இதுபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவையாற்ற நிறுவனங்களுக்கு உதவி வருகிறோம். அமேசான், ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் சிறு வணிகத்துக்கு வருவதால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை கிடைப்பதோடு, வணிகர்களுக்கும் பலன் கிடைக்கும் " என்று கூறினார்.
இதையும் படிங்க: மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய அடையாளமாக களம் காணும் ‘இன்’