இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தொழிற்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால், இந்திய பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது.
தற்போதுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில்கொண்டு சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து தொழில்துறையையும் மீட்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகச் சாலை போக்குவரத்துத் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை செயலர் கிரிதர் அரமனே கூறுகையில், "சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு மட்டுமின்றி அனைத்து தொழிற்துறைக்கும் ஏற்ற வகையில் பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை துறை சார்ந்தவர்களுடன் இணைந்து மத்திய அரசு உருவாக்கிவருகிறது. இது அனைத்து துறையினருக்கும் ஏற்ற ஒரு திட்டமாக இருக்கும்" என்றார்.