தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தங்கத்தின் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 51 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தங்கப் பத்திரங்கள் மீதான முதலீடுகளும் தற்போது தொடங்கியுள்ளன. தங்கப் பத்திரங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5051 ரூபாயாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தங்கப் பத்திரங்களில் அக்டோபர் 16ஆம் தேதிவரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம், அதைத்தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரங்கள் ஒதுக்கப்படும்.
தங்கத்தை ஒரு முதலீடாக மட்டும் கருதி முதலீடு செய்பவர்கள் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். ஏனென்றால், உலோகமாக தங்கத்தை வாங்குவதைக் காட்டிலும் இதுபோன்ற தங்கப் பத்திரங்களை வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகள் உள்ளன.
தங்கப் பத்திரங்கள் என்றால் என்ன?
தங்கப் பத்திரங்கள் என்பவை ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் அரசு பத்திரங்களாகும். இந்த பத்திரங்களுக்கு மத்திய அரசு இறையாண்மை உத்தரவாதத்தை வழங்குவதால் இவை மிகவும் பாதுகாப்பானதாக என்று கருதப்படுகின்றன.
தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?
தங்கத்தின் விலைகள ஏற்படும் உயர்வும், வீழ்ச்சியும் தங்கப் பத்திரங்களின் மதிப்பை நேரடியாக பாதிக்கும். இதுதவிர முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வட்டியும் அளிக்கப்படுகிறது.
மேலும், தங்கத்தை உலோகமாக வாங்கும்போது அதற்கு ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும். ஆனால், இந்த தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது ஜிஎஸ்டி பற்றிக் கவலைப்பட தேவையில்லை. மேலும், தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதால், திருட்டு குறித்து துளியும் கவலைப்பட தேவையில்லை.
நகைகளை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவற்றுக்கும் நம்மிடம் இருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படும். இவையும் தங்கப் பத்திர முதலீடுகளில் இல்லை.
மேலும், முக்கியமாக இந்த தங்கப் பத்திரங்களை வங்கி கடனுக்கு பிணையமாகப் பயன்படுத்தலாம். அதேபோல நிர்ணயிக்கப்பட வேண்டிய கடனுக்கான மதிப்பு ( loan-to-value) விகிதம், உலோக தங்கத்திற்கும் கிடைக்கும் அதே அளவு கிடைக்கும் என்பதும் முக்கியமானது.
தங்கப் பத்திரங்களுக்கான லாக்-இன் காலம் என்ன?