கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டிவருகின்றனர். இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அதன்படி தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துவருவதால், தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மும்பையில் இருக்கும் Multi-commodity exchangeஇல், 10 கிராம் தங்கத்தின் விலை 48.420 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போவதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், "கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கில்கொண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை மாற்றி (குறைத்து) வெளியிட சர்வதேச நிதியம் திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டபோதும், எதிர்வரும் காலங்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதில் பெரிய நிச்சயமற்ற தன்மையே தொடர்கிறது" என்றார்.