இந்தியாவில்வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல காலணி தயாரிக்கும் நிறுவனம் வான் வெல்க்ஸ். ஸ்டைலாக மட்டுமின்றி, உடல்நிலைக்கும் முக்கியத்துவம் அளித்து மூட்டு வலி, கால் வலி ஆகியவை வராமல் இருக்கும் வகையில் காலணிகளைத் தயாரித்து புகழ்பெற்றது இந்த நிறுவனம்.
வான் வெல்க்ஸ் நிறுவனத்தின் காலணிகள் அனைத்தும் இப்போது சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், வான் வெல்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் காசா எவர்ஸ், தன் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியையும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் லாட்ரீக் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்போது தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று லாட்ரீக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கான அமைச்சர் உதய் பஹான் சிங் கூறுகையில், "பல நூறு நபர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் இந்நிறுவனம் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு, குறிப்பாக உத்தரப் பிரதேசத்திற்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி" என்றார்.
வான் வெல்க்ஸ் நிறுவனத்தின் காலாணிகள் சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் வான் வெல்க்ஸ் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தனது விற்பனையைத் தொடங்கியது.
இதையும் படிங்க: ஊரடங்கால் 90 விழுக்காடு குறைந்த உணவக வருவாய்!