கரோனா பரவலுக்குப் பிறகு சீனா மீதான சார்பை குறைக்கும்வகையில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு நகர்ந்துவருகின்றன. இதனால் தங்களுக்குப் புதிய ஆர்டர்கள் வருவதாகக் கூறுகின்றனர் திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், " கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 8,300 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 4,200 கோடி ரூபாய்க்குதான் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இம்மாதத்தில் நிறைய புதிய ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
சீனா, வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய உற்பத்தியாளர்களிடம் சில பிரச்னைகள் இருப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன. ஒரே தரத்தில் பொருள்கள் வழங்குவதில்லை, ஆர்டர்களைவிட குறைவான எண்ணிக்கையில் பொருள்களை அனுப்புவது, உரிய நேரத்தில் பொருள்களைத் தயார் செய்யாதது என்ற மூன்று பிரச்னைகள், இந்திய ஜவுளித் துறையின் மீது பன்னாட்டு நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையின்மைக்கு காரணம்.
மேலும், நம்மிடம் திறன் பெற்றவர்களை விட, தாங்களாகவே கற்றுக்கொண்டு பணியாற்றும் தொழிலாளர்களே இருக்கிறார்கள். தொழில்துறையும், அரசும் இணைந்து தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால்தான், பன்னாட்டு சந்தையின் தரத்துக்கு ஏற்ப உயரும். சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் மத்தியில் வெறுப்புணர்சி உண்டாகியிருப்பது உண்மை என்றாலும், அங்கிருந்து வெளியேறும் நிறுவனங்கள் இங்கு வர வேண்டும் என்றால், நமது தரத்தை உயர்த்த வேண்டும்.
’வெளிநாடுகள் ஜவுளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன' குறைந்த ஊதியத்திற்காக மட்டும் நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஒட்டுமொத்த உற்பத்திச் செலவில் வெறும் 15 விழுக்காடுதான் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகிறது. அந்நாட்டு அரசுகள் ஜவுளித் துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
வளர்ச்சி குறைந்த நாடு என்ற பெயரும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதும், அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 15 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுவதும் நமக்குப் பாதகமாக அமைந்துள்ளது. மத்திய அரசு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கினால்தான் உலகச் சந்தையில் போட்டிபோட முடியும்” என்று கூறினார்.
ஆயத்த ஆடைத் துறையின் தற்போதைய நிலை பற்றி நம்மிடம் பேசிய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் சக்திவேல், "திருப்பூர் ஆயத்த ஆடைத் துறை கரோனா வைரஸ் (தீநுண்மி) பிரச்னையால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. பிப்ரவரி மாதத்தில் ஏராளமான ஆர்டர்கள் ரத்துசெய்யப்பட்டன. ஏற்கனவே அனுப்பிய சரக்குகளுக்கு பணம் பெற முடியாத நிலை இருந்தது. தற்போது அதிகளவிலான உலக நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பொருள்களை வாங்க விரும்புகின்றன.
’தற்போது உலக நிறுவனங்கள் பல இந்திய பொருள்களை வாங்க விரும்புகின்றன’ 500-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் எங்களிடம் பொருள்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். ஏராளமான நிறுவனங்கள் பரிசோதனை அடிப்படையில் ஆர்டர்கள் வழங்கிவருகின்றன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வட மாநிலத் தொழிலாளர்களும் வரத் தொடங்கியுள்ளதால், மீண்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்றுமதி 15 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஐரோப்பிய நாடுகள் வங்கதேசத்தையே அதிகளவில் நாடுகின்றன. அதேபோல் வியட்நாமில் சீன முதலீடுகளே அதிகம். மற்ற நாடுகள் இந்தியாவிடம் வாங்கவே விரும்புகின்றன" என்றார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட்டில் அதிகரித்த கார் விற்பனை!