கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அளவில் மிகச்சிறியதான இந்நோய்தொற்றுக் கிருமி மனிதர்களின் உயிரோடு விளையாடுகிறது. சீனா, அமெரிக்கா போன்ற வலிமையான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தது, உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தச் சூழலை சமாளிக்க திண்டாடும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டின் பொது சுகாதார சூழ்நிலையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இந்திய பொதுசுகாதாரம் தாய், குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளில் இன்னும் முன்னேறவில்லை. சர்வதேச சுகாதாரத்தரங்களை பூர்த்தி செய்வதில் இந்தியா வெகுவாக பின்தங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மருத்துவ முறைகள், சேவைகள் கிடைப்பதில் வேறுபாடுகள் உள்ளன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆரோக்கியமான மக்கள் தொகை ஒரு பகுதியாகும். அதனால்தான் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் விழுக்காட்டை பொது சுகாதார அமைப்புகளை உருவாக்க முதலீடு செய்கின்றன. உலக சுகாதார குறியீட்டு கணக்கெடுப்பில் கணக்கெடுக்கப்பட்ட 190 நாடுகளில், இந்தியா 141வது இடத்திலுள்ளது. கோவிட்-19 ஏற்படுத்திய அதிர்வலைகளை அடுத்து, தற்போதுள்ள சுகாதார அமைப்புகளிலுள்ள ஓட்டைகளைப் பற்றி விவாதிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில், சுகாதார 69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காடாகும். தற்போதைய சுகாதார சவால்களை சமாளிக்க இந்த நிதிகள் போதுமானதாக இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காட்டை சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று 2011ல் திட்டக் குழு பரிந்துரைத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
2018ஆம் ஆண்டில், நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இது ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது. பொருளாதார கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டை சேர்ந்த சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இன்றுவரை, 72 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஆனால் இத்திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நோய்களை மட்டுமே உள்ளடக்கியது.
2022ஆம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் சுகாதார நிலையங்களை நிறுவ அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. துரதிஷ்டவசமாக, இந்த இலக்கில் கால் பங்கு கூட எட்டப்படவில்லை. ஆயுஷ்மான் இந்தியாவை அமல்படுத்துவதற்கு, பொறுப்பேற்றுள்ள அமைப்பான தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காப்பீட்டு தொகை தொடர்பான பல்வேறு இடைவெளிகளை சுட்டிக் காட்டியுள்ளது.
அதிக வறுமை மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகியவை குறைந்த நிதியைப் பயன்படுத்துகின்றன. கேரள மாநிலம் காப்பீடு வழங்குவதில் முன்னணியில் உள்ளது. எங்கு தேவை அதிகமுள்ளதோ, அந்த பகுதிகளில் ஒதுக்கீடு அளவு குறைவாக உள்ளது. இது திட்டத்தின் தோல்வியைக் காட்டுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் 115 மாவட்டங்களில், எதுவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தேர்வு செய்யவில்லை.
குறிப்பாக, தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டவில்லை. மகாராஷ்டிரா, உத்தரகண்ட் தவிர, மற்ற மாநிலங்களில் வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் மட்டுமே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆயிரத்து 456 நபர்களுக்கு 1 மருத்துவர் மட்டுமே இருக்கிறார். உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கும் 1 மருத்துவரை பரிந்துரைக்கிறது.
இந்த விகிதத்தை மேம்படுத்துவதற்கும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், மாவட்ட மருத்துவமனைகளையொட்டி மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. தற்போது, நாடு முழுவதும் 526 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில், இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இடங்கள் 1,00,000 ஆக உயர்ந்துள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு இடையிலான இடைவெளி எப்போதுமே அதிகரித்து வருகிறது. நாட்டில் சுமார் 58 விழுக்காடு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. 81 விழுக்காடு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். மருத்துவக் கல்வியை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய தேர்வு வாரியத்தின் கீழ் முதுகலை படிப்புகளை வழங்கவும் அரசு விரும்புகிறது.
அரசு நடத்தும் மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ்க்கு பின் பயிற்சி அளிக்க வசதிகள் பற்றாக்குறை உள்ளன. பயிற்சி பெற்ற மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் வரி விலக்குகளின் அடிப்படையில், கார்ப்பரேட் மருத்துவமனைகள் சிறந்த மருத்துவ உபகரணங்களை வாங்க முடியும். தனியார் துறையில் உள்ள சில மருத்துவர்கள் வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சி பெற முடிகிறது.