ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் இந்தியத் தொழிலதிபரான அதானியின் நிறுவனம் சார்பாக வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பல்வேறு தரப்பினரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக எஸ்பிஐ வங்கி சார்பாக அதானி குழுமத்திற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது. இதனைக் கண்டித்து நேற்று (நவ.27) நடந்த கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் சிலர் பதாகைகள் ஏந்திப் போராடினர்.
இந்நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி அதானிக்கு ஃபைனான்ஸ் செய்யக் கூடாது என பிரான்சில் செயல்பட்டு வரும் சொத்து மேலாண்மை நிறுவனமான அமுண்டி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜாக்கஸ் பார்பரீஸ் கூறுகையில், ''அதானி குழுமம் சார்பாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு எஸ்பிஐ நிதியளிக்கக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் நிதியளிப்பது அவர்களின் முடிவு தான். ஒருவேளை அவர்கள் நிதியளித்தால் நாங்கள் முதலீடு செய்வதிலிருந்து விலகுவோம். சுரங்கத்திற்கு நிதியளிப்பது என்பது பசுமைப் பத்திர உத்தரவாததிற்கு முரணான நடவடிக்கை. நாங்கள் ஏற்கனவே எஸ்பிஐயிடம் எங்களின் முடிவைக் கூறிவிட்டோம். அவர்களின் பதிலுக்காக தற்போது காத்திருக்கிறோம்'' என்றார்.
பிரான்சிஸ் உள்ள அமுண்டி நிறுவனம், ஐரோப்பாவின் பெரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் சார்பாக 1,650 பில்லியன் யூரோக்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:அதானி நிறுவனத்திற்கு எதிராக சிட்னி மைதானத்தில் களமிறங்கிய போராட்டக்காரர்கள்...!