கரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் விதமாக ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு நிதிச் சலுகையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துவருகிறார்.
இந்த சந்திப்பின் போது வேளாண்துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் குறித்து தனது கருத்துகளை வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார்.
கரோனா பாதிப்பு காலத்தில் பெருளவில் முடங்கியுள்ள வேளாண்துறைக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதில் அரசு முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் விவசாயிகளின் கைகளில் உடனடியாக பணம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
விவசாய பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் பிரத்தியேக பேட்டி மேலும், ஊரடங்கு காலத்தில் சிறுகுறு விவசாயிகள் தங்களின் விலைபொருட்களை சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கலை சந்தித்துவருகின்றனர். குறிப்பாக, பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து மூலம் சந்தைப்படுத்தும் பெருவாரியான விவசாயிகள் தங்கள் விலைபொருட்களை விற்கமுடியாமல் அவை வீணாகும் அவலம் நடைபெற்றுள்ளது என்றார்.
வேளாண் துறையில் மத்திய அரசு அறவித்துள்ள புதிய சட்ட திருத்தங்கள், மாற்றங்கள் குறித்து அவர் பேசுகையில், மத்திய அரசு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேளாண் சந்தையை திறந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முன்னெடுப்பின் மூலம் விவசாயிகளுக்கு அரசு மூலம் கிடைத்துவரும் அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு பறிபோகும் அபாயம் நிகழவும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகள் பறிபோகாமல் அரசின் ஒழுங்காணையம் போன்ற மேற்பார்வையில் இந்த திருத்தங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், குறிப்பிட்ட சாரர் கையில் சந்தை முழுவதுமாக செல்லும் அபாயம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது - துறைமுகத் தலைவர் டி.கே.ராமசந்திரன் பிரத்யேக பேட்டி