பிரதமர் மோடி, கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனக்கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிக்கவும், அண்டை நாடுகளிலிருந்து வரும் போலி ரூபாய் நோட்டுகளை களையவும், பயங்கரவாதத்திற்கு உதவும் நோக்கில் வழங்கப்படும் நிதியை தடுத்து நிறுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த அதிரடி நடவடிக்கையை தொடக்கத்தில் மக்கள் வரவேற்றிருந்தாலும், தொடக்கம் முதலே பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். ”பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு திட்டமிட்ட கொள்ளை” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், 2019-20ஆம் நிதியாண்டில், போலி 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 151 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்டை நாடுகளிலிந்து வரும் போலி 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 37.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.