கரோனா காரணமாக நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், வர்த்தக நடவடிக்கையை ஊக்குவிக்கும்விதமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, வீடு, வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தனிநபர் நிதி மேம்பாட்டு ஆலோசகர் சாய் கிருஷ்ணா பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், "தற்போது வங்கியில் வீட்டுக்கடன் செலுத்தும் மக்கள் வட்டிக்கடன் தற்போது 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன்மூலம், மக்களுக்குச் செலவு குறைந்து நிதி சேமிப்பு ஏற்படும்.
அதேவேளை, கடன் தவணை கால நீட்டிப்பை மக்கள் முறையாக அணுக வேண்டும். தனிநபர் கடன் செலுத்த திறன் உள்ளவர்கள் உடனுக்குடனே செலுத்திவிடுவது நலமாகும்.
கடன் செலுத்த காலக்கெடுதான் நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. எப்படி இருந்தாலும், கடன் கட்டியே தீர வேண்டும் என்ற நிலையில் தற்போதைய சூழலுக்கேற்ப பொதுமக்கள் முடிவெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு