கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளும் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
உற்பத்தி குறைந்துள்ளதால் நாட்டின் ஏற்றுமதியும் கணிசமாக குறைந்துவருகின்றது. இந்நிலையில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, இந்தியாவில் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான ஏற்றுமதி 10.21 விழுக்காடு குறைந்து, 13.64 பில்லியன் டாலர்களாக உள்ளது. குறிப்பாக பெட்ரோலிய பொருள்கள், தோல் பொருள்கள், நகை உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளன.
கரோனா ஊரடங்கிற்கு பின் ஏற்றுமதி கணிசமாக குறைந்திருந்தது. இந்தியாவில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மாதம் 60.28 விழுக்காடும், மே மாதம் 36.47 விழுக்காடும், ஜூன் மாதம் 12.41 விழுக்காடும் ஏற்றுமதி குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதம் நாட்டின் இறக்குமதியும் 28.4 விழுக்காடு குறைந்து, 28.47 பில்லியான் டாலர்களாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை இந்தாண்டு 4.83 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
குறிப்பாக எண்ணெய் இறக்குமதி 31.97 விழுக்காடு குறைந்து 6.53 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. தங்க இறக்குமதி 4.17 சதவீதம் அதிகரித்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.